
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அரபிக்கடலில் இந்திய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இன்று முதல் 7ம் தேதி வரை போர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த போர் பயிற்சியில் போர் கப்பல்களில் இருந்து ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்தும் வகையில் பயிற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அரபிக்கடலில் இந்திய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபடுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.