சென்னை: அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 58 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை தவிர தனியார் பள்ளிகள் 12690, சிபிஎஸ்இ பள்ளிகள் 1835 இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் தொடக்க கல்வித்துறையின் கீழ் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட பள்ளிகளில் அதிக அளவில் தொடக்கப் பள்ளிகளில் தான் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம்.
அடுத்த நிலையில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் சேர்க்கை நடப்பது வழக்கம். இருப்பினும், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதை பெற்றோர் பெரிதும் விருப்பம் காட்டுகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களை சேர்க்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் மூலம் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதின் பேரில் கடந்த ஆண்டு மார்ச் மாதமே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி சென்னையில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அதேபோல, இந்த ஆண்டும் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இன்று முதல் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் வார விடுமுறை இருப்பின் 3ம் தேதி முதல் சேர்க்கை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post அரசுப்பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.