வேலூர், பிப். 10: ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் 4 மாத சிசு உயிரிழந்த நிலையில், உயர்மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் சிறப்பு மருத்துவ குழுவின் பரிந்துரைக்கு பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6ம் தேதி ரயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். அப்போது ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார். இதில் பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்றுமுன்தினம் உயிரிழந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் அவரை ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்க்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறுகையில், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்னையாக தொடர்ந்து உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவினர் அப்பெண்ணை பரிசோதித்தனர். அவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதாலும், பெண்ணின் நலன் கருதியும் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது, என்றார்.
The post அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து பெண் தனியார் மருந்துவமனைக்கு மாற்றம்: உயர் மருத்துவ சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் பரிந்துரை appeared first on Dinakaran.