சென்னை: தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 19 விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர், அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர். அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய அளவில் உறுப்பினர்களாக உள்ள 70 மாநில போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து, ஆண்டுதோறும் போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 2023-24ம் ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகளை பெற்றுள்ளன. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 12 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 7 பிரிவுகளிலுமாக மொத்தம் 69ல் 19 பிரிவுகளில் பரிசு பெற்றுள்ளது.
இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்குக்கு மேல் ஆகும். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சந்தித்து, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2023-24ம் ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 19 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 19 விருதுகள் அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.