
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து ஹாவேரிக்கு நேற்று காலை ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கண்டக்டர் இல்லை. டிரைவர் தான் 2 பணிகளையும் கவனித்தார்.
இந்தநிலையில் ஹாவேரி மாவட்டம் ஹனகல் அருகே திடீரென்று பஸ் நின்றது. இதை பார்த்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் எழுந்து வந்து டிரைவரிடம் கேட்டபோது, அவர் எதுவும் கூறாமல் பின் இருக்கையில் அமர்ந்து தொழுகை செய்ய தொடங்கினார். சுமார் 10 நிமிடத்துக்கு மேலாக அவர் தொழுகை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பொறுமை இழந்த பயணி ஒருவர் தனது செல்போனில் டிரைவர் தொழுகை செய்வதை படம் பிடித்தார். பின்னர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது. அதாவது பணி நேரத்தில் டிரைவர் தொழுகை செய்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.