அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

2 weeks ago 4

சென்னை,

தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 'தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடி மதிப்பில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 497 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிதியாண்டிலும் ரூ.1,000 கோடி மதிப்பில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்' என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, முதல்கட்டமாக நடப்பு கல்வியாண்டு 440 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 3 ஆயிரத்து 32 கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் அமைப்பதற்காக ரூ.745 கோடியே 27 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

நபார்டு வங்கியின் ரூ.633 கோடியே 48 லட்சத்து 16 ஆயிரம் கடனுதவி மற்றும் அரசின் ரூ.111 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

Read Entire Article