
புனே,
மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில் காத்திருந்தார். தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கி வந்தான்.
அந்த ஆசாமி, இளம்பெண்ணை பார்த்து சகோதரி... என்று கூறி நைசாக பேச்சு கொடுத்தான். நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என்று கூறியுள்ளான். இதையடுத்து பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்து செல்வதாக கூறி, இளம்பெண்ணை அழைத்து சென்றான்.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு (எம்.எஸ்.ஆர்.டி.சி.) சொந்தமான 'சிவ்சாகி' என்ற சொகுசு பஸ்சை காட்டி, இது தான் நீங்கள் போக வேண்டிய ஊருக்கு செல்லும் பஸ் என்று கூறியுள்ளான். அந்த பஸ்சில் இளம்பெண் ஏறியபோது, விளக்குகள் எல்லாம் அணைந்து கிடந்தது. டிரைவர், நடத்துனர் வந்த உடன் பஸ் கிளம்பி விடும் என கூறினான். இளம்பெண், பஸ்சுக்குள் ஏறிச்சென்றார். அந்த ஆசாமியும் பின்தொடர்ந்து பஸ்சில் ஏறினான். திடீரென பஸ்சின் கதவை பூட்டினான். அது ஏ.சி. பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
அந்த ஆசாமி பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான். இந்த கொடூர சம்பவம் குறித்து தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த ராம்தாஸ் காடே (வயது36) என்பது தெரியவந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளியை கண்டுபிடிக்க 13 காவல் குழுக்கள் பணியாற்றி வருவதாகவும், கடே பற்றிய தகவல்கலை 020-24442769 அல்லது 9881670659 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.