அரசு சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

2 months ago 17

சென்னை: அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஆய்வு செய்த நீதிபதி, அரசு சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், மாணவர்களுக்கு முறையான சட்டக் கல்வி வழங்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. முறையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடி விடுவது நல்லது.

தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அரசு சட்டக்கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

The post அரசு சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article