சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் தள்ளிப்போகிறது. 2024-2025ம் நிதியாண்டின் கடைசி நாள் மார்ச் 31ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆனால் அன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் விடுமுறையாகும். அதேபோல் மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதுடன் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகும்.
அதேபோல் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஏப்ரல் 1ம் தேதியை பொறுத்தவரை வங்கி கணக்கு தொடக்கம் என்பதால் அன்று எந்த பணிகளும் வங்கிகளில் நடைபெறாது. எனவே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இந்த முறை ஏப்ரல் 2ம் தேதி தான் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்க குறிப்பில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
The post அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.