பெரம்பூர்: ஆர்ப்பாட்ட களம், போராட்டம், மக்கள் பணி என்று எதுவும் தெரியாத தவழுகின்ற குழந்தைதான் நடிகர் விஜய் என்று அமைச்சர் சேகர்பாபு கடுமையாக சாடினார். சென்னை திருவிக. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில், ‘’கலைஞரின் வருமுன் காப்போம்’’சிறப்பு மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் இன்று காலை துவக்கி வைத்தனர். தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி; தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது எனவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளாரே? இதற்கு ஒரு பாடல்தான் ஞாபகம் வருகிறது. மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே, மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே, எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே, கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே, கருணை தீபம் ஏற்றி வைத்த தெங்கள் நெஞ்சமே என்றார். பெண்கள் தான் 2026ம் ஆண்டு திமுக ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். தமிழ்நாடு முதல்வர் எங்கு போனாலும் வரவேற்கக் கூடிய கூட்டம் என்றால் அதில் 80 சதவீதம் பெண்களாகத்தான் உள்ளனர். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள். பல கரடுமுரடான பாதைகளை கடந்துவந்தவர்கள். சிறைஎன்றால் என்னவென்றுதெரியாதவர்களுக்கு போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு. ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு, பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல் மழை வெள்ளம் போன்றவற்றில் கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து பத்து பேருக்கு உதவி செய்து அதை போட்டோ எடுத்து பிரசுரம் செய்கிறார்கள்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேயர் பிரியா கூறும்போது, ‘’ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மூலமாக மண்டல வாரியாக பகுதி மருத்துவ முகாம் தொடங்கப்படும். இன்று நாள் முழுவதும் நடைபெறும் பல்வேறு மருத்துவ முகாமில் மக்கள் பயன்பெறலாம். இன்று மண்டலம் 4, 6, 11, 12, 13 ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும்’ என்றார். இந்த மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, ஹீமோகுளோபின் எவ்வளவு உள்ளது, டெங்கு உள்ளதா, கர்ப்பபை புற்றுநோய் உள்ளதா, டிபி நோய் உள்ளதா உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்து மக்கள் பயன்பெறலாம். மருத்துவ முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான பணிகளும் அதற்கான காப்பீட்டு அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
The post ஆர்ப்பாட்ட களம், போராட்டம் மக்கள் பணி எதுவும் தெரியாத தவழுகின்ற குழந்தைதான் நடிகர் விஜய்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு appeared first on Dinakaran.