பெங்களூரு: ‘அரசு ஊழியர்களின் பணி நீட்டிப்பு என்பது அந்த பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’ என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மாநில குடிமைப் பணிகள் ஆணைய தலைவர்களின் 25வது தேசிய மாநாடு பெங்களூருவில் நேற்று நடந்தது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்து பேசியதாவது: பணி நீட்டிப்பு வழங்கப்படுவதன் மூலம் அந்த பணிக்காக வரிசையில் நிற்கும் பலருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் பணி நீட்டிப்பு என்பது ஒருசிலரின் திறமையின்மையையும் இயலாமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
இன்றியமையாமை என்பது ஒரு கட்டுக்கதை. நாடு முழுக்க திறமைசாலிகள் நிறைந்திருக்கின்றனர். யாருமே இயலாதவர் அல்ல. ஒன்றிய மற்றும் மாநில குடிமைப் பணி ஆணையத்தின் தலைவர்கள் நியமனம் அனுசரனை அல்லது விருப்பத்தின் பேரில் அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்க முடியாது. சில மாநிலங்களில் பிரீமியம் சேவைகளில் உள்ள ஊழியர்கள் ஓய்வுபெறுவதே கிடையாது. அவர்கள் பல தற்காலிக பெயரிடல்களை பெறுகின்றனர். அது நல்லதல்ல. இவ்வாறு தன்கர் பேசினார்.
The post அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு கூடாது: துணை ஜனாதிபதி பேச்சு appeared first on Dinakaran.