அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 2003ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தால் ஆட்சியில் இருந்த அப்போதைய அதிமுக அரசு, ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டெஸ்மா சட்டத்தின் மூலம் டிஸ்மிஸ் செய்தது. அதன்பின், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மிஸ் செய்ய வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை, அதிமுக அரசு ரத்து செய்தது. அனைத்தையும் 2006-ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது மீ்ண்டும் நடைமுறைப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 19 ஆண்டு முதல்வர் பொறுப்பில், 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார்.
1996-ல், அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதேவழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார். கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் நிர்வாகத்தின் தூண்களாக, அரசின் கரங்களாக விளங்கி வருகிறார்கள். திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி முக்கிய காரணம். அரசு நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் செல்ல பணி செய்வது அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலன் கருதி 9 அறிவிப்புகளை வெளியிடுகிறேன் எனக்கூறி சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு சலுகைகளை வழங்கி உள்ளார்.
கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்து 1-4-2025 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ளலாம். ஒன்றிய அரசு ஊழியர்களை போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழில்கல்விக்கு ரூ.1 லட்சமாகவும், கலை – அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படுகிறது. இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 1-7-2024 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான காலமாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் appeared first on Dinakaran.