அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் திருத்தம் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்க கூடாது: தமிழ்நாடு அரசு உத்தரவு

3 hours ago 1

சென்னை: அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் திருத்தம் எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு, 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில், தமிழக அரசு திருத்தம் செய்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது: அரசின் அனுமதியின்றி அரசு ஊழியர்கள், அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ரூ.25,000க்கும் அதிகமான பரிசுகளை பெறக் கூடாது. திருமணம் உள்ளிட்ட மத சடங்குகளின் போது ரூ.25,000 அதிகமான பரிசுகளைப் பெறலாம்.

இதை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அரசுக்கு எதிரான கருத்துக்களை, அரசு ஊழியர்கள் எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒரு அரசு ஊழியர், தனக்கான அரசு பணிகளைத் தவிர, எந்தவொரு அலுவல் சாரா கூட்டத்திற்கோ, மாநாட்டிற்கோ, தலைமை தாங்கவோ, பங்கேற்கவோ கூடாது.

மேலும் அரசு ஊழியர்கள், எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது. வேறு எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்க கூடாது. எந்த அரசியல் கட்சிக்கோ, தேர்தலில் எந்த வேட்பாளருக்கோ ஆதரவாக இருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது. ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினர், அரசியல் கட்சி, அமைப்புகளில் இருந்தால் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தலில் ஓட்டு போடலாம். ஆனால், யாருக்காகவும் பிரசாரம் செய்யவோ, வேறு வகைகளில் தலையிடவோ கூடாது. அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது.

எந்தவொரு அரசு ஊழியரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபடவோ கூடாது. அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது, கடமைகளை புறக்கணிப்பதும், போராட்டமாக கருதப்படும். அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது. அரசு ஊழியர்கள் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, மாநில பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம், ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடாது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது அமைதிக்கு எதிரான நோக்கங்கள், செயல்பாடுகள் கொண்ட எந்தவொரு சங்கத்திலும், உறுப்பினராக இருக்கக் கூடாது. அலுவலகத்திலும், பொது இடங்களுக்கு வரும்போதும், மது அருந்தி விட்டு வரக்கூடாது. தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் திருத்தம் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்க கூடாது: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article