
சென்னை,
பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. சமீபத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையையும், தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வட்ட தலைநகரங்களில் போராட்டங்களை நடத்தியது.
மேலும், நாளை (செவ்வாய்கிழமை) தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இதற்கிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, முடிவு எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து ஆணையிட்டு உள்ளார். இந்த குழுவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன், இன்று (திங்கள் கிழமை) சென்னை தலைமை செயலகத்தில், குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் மேற்கண்ட 4 அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது. விரைவில் தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.