அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை: முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு

3 hours ago 1

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையையும், தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வட்ட தலைநகரங்களில் போராட்டங்களை நடத்தியது.

மேலும், நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இதற்கிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, முடிவு எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் இடம்பெற்றுள்ளனர்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், ஜாக்டோ ஜியோ அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். விரைவில் தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை: முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article