அகமதாபாத்: குஜராத் அரசு அலுவலகத்தில் கைகலப்பு நடந்த நிலையில், அம்மாநில ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது ெசய்யப்பட்டார். இதற்கு பாஜக மீது கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள தேடியாபாடா அரசு அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சைதர் வசாவாவிற்கும், பஞ்சாயத்து தலைவர் சஞ்சய் வசாவாவிற்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. கூட்டத்தில், ஒரு குழுவிற்குள் ஆறு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது மற்றும் அவர்களது பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எம்.எல்.ஏ சைதர் வசாவா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவே இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கடும் வாக்குவாதமாக முற்றி, இறுதியில் கைகலப்பில் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ சைதர் வசாவா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘விசாவதர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியிடம் அடைந்த தோல்வியால் பாஜக தற்போது விரக்தியில் இருக்கிறது.
இதுபோன்ற கைதுகளால் ஆம் ஆத்மி கட்சி அஞ்சிவிடாது’ என்று அவர் கூறியுள்ளார். மறுபுறம், பஞ்சாயத்து தலைவர் சஞ்சய் வசாவா கூறுகையில், ‘கூட்டத்தின் போது எம்.எல்.ஏ சைதர் வசாவா தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டு, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, இரு தரப்பிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
The post அரசு அலுவலகத்தில் கைகலப்பு; குஜராத் ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது: பாஜக மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு appeared first on Dinakaran.