சென்னை: தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி (வியாழன்) கொண்டாடப்பட உள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தோடு சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், மறுநாள் நவம்பர் 1ம் தேதி (வெள்ளி) வெளியூர்களுக்கு சென்ற பணியாளர்கள் பணிக்கு வருவதில் சிரமம் உள்ளதோடு, குடும்பத்தோடு தீபாவளி பண்டிகை கொண்டாடிய உற்சாகம் இருக்காது.
இதை கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் கூடுதலாக அரசு ஈடுசெய்யும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து பரிசீலித்து வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி (வியாழன்) கொண்டாடப்படுகிறது.
பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு 01.11.2024 (வெள்ளி) அன்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒருநாள் கூடுதலாக விடுமுறை அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி (தீபாவளி), நவம்பர் 1ம் தேதி (அரசு விடுமுறை), 2 மற்றும் 3ம் தேதி (சனி, ஞாயிறு) என மொத்தம்
4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
The post அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு நவ. 1ம் தேதியும் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு, 4 நாட்கள் லீவு கிடைக்கும் appeared first on Dinakaran.