திருச்சி: தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என கூறியதையடுத்து “இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி. அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்; “2018ம் ஆண்டில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை இப்போது மட்டும் மறுப்பது ஏன்? , அப்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் கூறும் விதிமுறைகள் இல்லையா? மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டும் நிதி என்பது முறையல்ல. தயவு செய்து கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இதில் சுமார் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
மும்மொழிக் கொள்கை என்பது நமக்கு தேவையில்லாதது. இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால் நாங்கள் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டோம்? எங்களை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறீர்கள். இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி. அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என பகிரங்கமாகக் கூறிக்கொள்கிறேன். ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது என்பதற்கு தர்மேந்திர பிரதான் இன்று கொடுத்த பேட்டியே சாட்சி.
சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை உடனே ஒதுக்க வேண்டும்” என தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்த நிலையில் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் பேட்டியளித்தார்.
The post அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.