அரசியல் பயணத்தில் வந்துள்ள விஜய் நீண்ட தூரம் செல்ல நிறைய பாடம் கற்க வேண்டும்: அண்ணாமலை மீண்டும் அட்வைஸ்

1 month ago 5

நாகப்பட்டினம்: அரசியல் பயணத்தில் வந்துள்ள விஜய் நீண்ட தூரம் செல்ல நிறைய பாடங்களை கற்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க பணியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அமைச்சர் கிஷான் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர், வரும் 12ம் தேதி என்னை டெல்லிக்கு அழைத்துள்ளார். தமிழகம் திரும்பும்போது, வெற்றி செய்தியோடு தான் வருவேன். தமிழகத்தை பொறுத்த வரை ஒரு புறம் வளர்ச்சிக்கான திட்டம் வேண்டும். அந்த வளர்ச்சி மக்களை பாதிக்கும் என்றால் அதை முதலில் பாஜ தடுத்து நிறுத்தும். பிரதமர் மோடி தமிழர்களின் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார். விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட்டிருப்பது அவர்களது கட்சி விவகாரம். விசிக திருமாவளவனின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பது குறித்து நான் கேட்ட கேள்விக்கு, அவர் விதண்டாவாதமாக பேசியுள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தை பற்றி விஜய் பேசியுள்ளார். அதற்கான பதிலை விரிவாக தெரிவித்துள்ளேன். விஜய் அரசியல் பயணத்தில் நுழைந்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது, நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியலில் ஒவ்வொரு நாளும் புதிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யும் இந்த பாதையில் சென்றுதான் ஆக வேண்டும். அவர் வேறு ஒரு துறையில் சாதனை படைத்துவிட்டு அரசியல் துறைக்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில் வந்த உடனேயே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடும் என்று சொல்லமுடியாது. எனவே, விஜய் தனது பயணத்தில் எல்லாவற்றையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கடந்த 8ம் தேதி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

The post அரசியல் பயணத்தில் வந்துள்ள விஜய் நீண்ட தூரம் செல்ல நிறைய பாடம் கற்க வேண்டும்: அண்ணாமலை மீண்டும் அட்வைஸ் appeared first on Dinakaran.

Read Entire Article