அரசியல் செல்வாக்கில் பெற்ற ஆசிரியரின் இடமாற்ற உத்தரவு ரத்து: இமாச்சல் ஐகோர்ட் அதிரடி

2 weeks ago 3

சிம்லா: அரசியல் செல்வாக்கில் பெற்ற ஆசிரியர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து இமாச்சல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளது. பக்ஸைத் கல்வி வட்டத்தில் உள்ள கெல்தி அரசு தொடக்கப் பள்ளியில் இளநிலை அடிப்படை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார் சிங் என்பவர், தரம்ஷூர்-I வட்டத்தில் உள்ள கராரி பப்லாக் பள்ளிக்கு 4ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த இடமாற்றத்திற்கு எந்தவொரு நிர்வாகக் காரணமும் இல்லை என்றும், மே 16ம் தேதியிட்ட குறிப்பின் (அரசு முறை கடிதம்) அடிப்படையில் மட்டும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறி, ஆசிரியர் சித்தார் சிங் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல் இதே பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், தனக்குப் பதிலாக மாற்று ஆசிரியர் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ரேவல் துவா, அரசுத் தரப்பிடம் விளக்கம் கேட்டிருந்தார். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், அந்த இடமாற்ற உத்தரவு மாவட்ட கல்வி அலுவலர் குறிப்பின் அடிப்படையில்தான் பிறப்பிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். இதைக் கருத்தில் கொண்ட நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக எந்த ஆய்வும் செய்யாமல், ஒரு குறிப்பின் அடிப்படையில் மட்டுமே இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது நிர்வாக கொள்கைகளுக்கு எதிரானது.

எனவே, அந்த இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தார். அதே சமயம், நடைமுறையில் உள்ள இடமாற்றக் கொள்கையின்படி, சட்டத்திற்குட்பட்டு மீண்டும் அவரை இடமாற்றம் செய்ய அரசுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

The post அரசியல் செல்வாக்கில் பெற்ற ஆசிரியரின் இடமாற்ற உத்தரவு ரத்து: இமாச்சல் ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article