புதுடெல்லி,
நமது நாட்டின் அரசியலமைப்பு சாசனம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி, முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசமைப்பு சாசனம் ஏற்கப்பட்டு 75-வது ஆண்டை எட்டியதைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் விவாதம் நடத்தப்படுகிறது.
பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் விவாதத்தை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து உரையாற்றுவார். கேள்வி நேரத்துக்குப் பிறகு விவாதங்கள் தொடங்கும், இது மக்களவை நிகழ்ச்சி நிரலிலும் பட்டியலிடப்பட்டு உள்ளது. அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மக்களவையில் பதில் அளிக்கிறார்.
மாநிலங்களவையில் வருகிற 16, 17-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் இதே போன்ற விவாதத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிரதமர் மோடி 17-ந்தேதி மேலவையில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.