அரசியல் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.. விஜய்க்கு மறைமுக வாழ்த்து

11 hours ago 3

புதுடெல்லி,

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி படம் வெளியானது. அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. 33 ஆண்டுகளக நடித்து வரும் அஜித்திற்கு கலைத்துறையில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது.

கடந்த திங்கள்கிழமை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்மபூஷன் விருதை அஜித் பெற்றார். இதையடுத்து டெல்லியில் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவிற்கு அஜித் பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து அஜித் மனம் திறந்து பேசியிருக்கிறார். அஜித் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒரு விஷயம் அல்ல. எனினும், நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு தத்துவம் பேசவில்லை.

எனக்கு பல அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. புற்றுநோயிலிருந்து தப்பிய பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உள்ளார்கள். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாம் அறிவோம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியலில் எந்தவொரு ஆசையும் கிடையாது. எனது சக நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளது என்பது அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் மக்கள் தங்கள் தலைமையை தாங்களே தேர்ந்தெடுக்க முடியும். எனவே, எனது சக நடிகர்கள் மட்டுமின்றி. அரசியல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பி அரசியலில் இறங்கும் அனைவருக்கும் வெல்ல வேண்டும் என்பதே விருப்பம்.

அரசியலை வெளியே இருந்து கொண்டு மதிப்பீடு செய்வதும் கொள்கைகளைப் பரிந்துரைப்பது எளிது. ஆனால் நீங்கள் களத்தில் இருக்கும் போதுதான் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்வீர்கள். ஒரு கொள்கையை அமல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது அப்போது தான் புரியும். இந்தியா என்பது 140 கோடி மக்களைக் கொண்டது. இங்கு வெவ்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மொழிகளைக் கொண்ட மக்கள் உள்ளனர். இதை நிர்வகிப்பது நம்பமுடியாத அளவிற்குச் சவாலானது. நடிப்பு எப்போதும் என் தேர்வாக இருந்ததில்லை. நான் ஒரு விபத்தாக நடிகன் ஆனவன். அரசு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும், நான் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்தேன்.

தொடக்கத்தில் எனக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு மொழி எனக்குப் பேசத் தெரியாது. இருந்தாலும் நான் அதைத் தொடர முடிவு செய்தேன். நான் இருட்டில் குதிக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால், நடிகர்களாக விரும்பிய நண்பர்கள் சிலர், எனக்கு வந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன் என்பதை கேள்விபட்டு கடும் கோபம் அடைந்தனர். கிடைக்கும் வாய்ப்பை இப்படி நழுவவிடுவது பெரும் தவறு என்றனர். நான் நடிகன் ஆனது இப்படித்தான்" என்றார்.

Read Entire Article