'அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது' - விஜய்க்கு தி.மு.க. பதிலடி

6 months ago 21

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "டாக்டர் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு கூட வி.சி.க. தலைவர் திருமாவளவனால் வர முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அழுத்தம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று கூறிய விஜய், "வேங்கைவயல் ஊரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோன்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுணிந்துபோவார்" என்று விமர்சித்தார்.

அதே சமயம், விஜய்யின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளிடம் இருந்து தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பலவீனமாக இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது என விஜய்யின் பேச்சுக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"அரசியலில் தப்பு கணக்கு போடும் பழக்கம் தி.மு.க.வுக்கு கிடையாது. விஜய்க்கு வேண்டுமானால் கணக்கு தெரியாமல் இருக்கலாம். திரைத்துறையில் வேண்டுமானால் பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர், பெரிய இசையமைப்பாளர் என எல்லா பிளஸ்-ம் இருக்க கூடிய படம் தோல்வி அடையலாம்.

ஆனால் அரசியலில் எந்த பிளஸ்-ம் மைனஸ் ஆவதற்கான வாய்ப்பே கிடையாது. அரசியல் கணக்கை யாராலும் மாற்ற முடியாது. பிளஸ்ஸை மைனஸ் ஆக்கி காட்டும் வல்லமை விஜய்க்கும் கிடையாது, வேறு யாருக்கும் கிடையாது. கடன் வாங்கி கணக்கு பேடுபவர்களால் வேண்டுமானால் அது முடியலாம். ஆனால் நாங்கள் கடன் வாங்கி கணக்கு போடுபவர்கள் அல்ல, எங்கள் சொந்த கணக்கை போடுபவர்கள்.

திருமாவளவனுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்திருந்தால் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருப்பார். திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறார் என்பதை அவர் தெளிவாக சொல்லிவிட்டார். தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது. அனைத்து தி.மு.க. தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல், உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு தி.மு.க. தொண்டரும் போராடி பெற்றுத்தந்த பொறுப்புதான் அவருக்கான துணை முதல்-அமைச்சர் பதவியே தவிர, வாரிசு என்ற அடிப்படையில் அவர் அந்த பதவிக்கு வரவில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் நீதியரசர் சத்யநாராயணன் கமிஷனை நாங்கள் நியமித்துள்ளோம். அரசாங்கம் முறைப்படி அனைத்து விசாரணைகளையும் நடத்தி வருகிறது. யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. வேங்கைவயல் விவகாரத்தில் எந்த எம்.எல்.ஏ.வோ. அல்லது அமைச்சரோ குறுக்கீடு செய்யவில்லை."

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Read Entire Article