சென்னை: “மாநிலத்தில் உள்ள, பல ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, வேட்டி சேலைகள் வழங்குதல் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகிய இரு சீரிய நோக்கங்களுடன், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 27.08.2024 மற்றும் 23.10.2024 தேதியிட்ட அரசாணைகளின்படி, பொங்கல் 2025 திட்டத்துக்கு மொத்தத் தேவையான 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளை உற்பத்தி செய்ய ஆணைகள் வெளியிடப்பட்டது. இவ்வரசாணைகளின்படி, இத்திட்டத்துக்கு தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள் முழுமையாக தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறிகள், பெடல்தறிகள் மற்றும் விசைத்தறிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.