அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: அதிகாரிகள் வலியுறுத்தல்

1 day ago 3

ராமநாதபுரம், மே 15: ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்புவோர் இடைதரகர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம். நேரடியாக அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2030க்குள் குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் விதமாகவும், ஏழை,எளிய மக்களின் நலனுக்காகவும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடியை அரசு ஒதுக்கியது. வீடு இல்லாதவர்கள், குடிசை வீடு, ஓட்டு வீடுகளில் வசிப்போரிடம் இருந்து பெற்ற மனுக்களின் அடிப்படையில் தற்போது வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, மாநில, மாவட்ட அதிகாரிகள், ஒன்றிய அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரையிலான வளர்ச்சி துறை அலுவலர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் முழுவீச்சியில் நடந்து வருகிறது.

ரூ.3லட்சத்து 50ஆயிரம் முழு மானியத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. வீடு கட்ட நிலம் இல்லாதவர்களுக்கும் அரசு நிலம் வழங்கி வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக இருப்பின் அவர்களின் வசதிக்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 50 வங்கி கடன் உதவியும் செய்து கொடுக்கப்படுகிறது. அஸ்திவாரம் கட்டும் பணி, தலைவாசல் நிலை, ஜன்னல் வைக்கும் போது, மேற்கூரை கான்கிரீட் அமைத்தல் என கட்டிடம் கட்டும் பணி தன்மைக்கேற்ப 4 தவணைகளில் பயனாளியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஆகிய 11 யூனியன்களில் உள்ள 429 பஞ்சாயத்துகளில் வீடுகள் வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் யூனியன் அலுவலகத்திற்கு வந்துள்ள நிர்வாக அனுமதியை பார்த்து, வெளிநபர்களான சில இடைத்தரகர்கள், தங்களின் சிபாரிசு படி நிர்வாக அனுமதி வாங்கி தரப்பட்டுள்ளது. அதற்கு பணம் வேண்டும் எனக் கூறி ரூ.10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கடலாடி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவர் கூறும்போது, பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வீடு கோரி மனு அளித்தேன். அதன்பேரில் பஞ்சாயத்து செயலர், மண்டல துணை பி.டி.ஓ மற்றும் பிடிஓ நேரடியாக ஆய்வு செய்தும், நாங்கள் வழங்கிய உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு வீடு கட்டுவதற்கு ஆணை மற்றும் நிர்வாக அனுமதி பெற்று தந்துள்ளனர். ஆனால் சம்மந்தமில்லாத வெளிநபர்கள், தன்னால் நிர்வாக அனுமதி கிடைத்ததாக கூறி பணம் கேட்கின்றனர். இது குறித்து கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கலைஞரின் கனவு இல்லம் திட்டமானது தமிழக முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஒரு மகத்தான திட்டமாகும். வீடு கட்டி வரும் ஏழை,எளிய மக்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. மேலும் வீடு தேவைப்படுவோர் நேரடியாக அந்தந்த யூனியன் பி.டி.ஓக்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம். வாரந்தோறும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்து பயனடையலாம். வெளிநபர்கள், இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பணம் பெறுவோர் குறித்து விசாரித்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

The post அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: அதிகாரிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article