அரசின் புயல் வேகம்

1 month ago 8

வடகிழக்கு பருவமழையின் துவக்கமே தமிழகத்தில் அதிரடியாக இருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மழையால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கினர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி கிடைத்தன. இதனால் அவசியத் தேவையின்றி மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் கொட்டும் மழையிலும் பாதிப்புகளை ஆய்வு செய்து அதிரடியாக சரி செய்ய உத்தரவிட்டனர்.

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையை கடக்குமென கூறப்பட்டது. தற்போது தெற்கு ஆந்திரா பகுதியில் இன்று கரையை கடக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதி தீவிர கனமழையில் இருந்து சென்னை தப்பியுள்ளது. இருப்பினும், கரையை கடக்கும்போது சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் பெரிய அளவில் மழை சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

அரசு சார்பில் மழையால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து செய்து தரப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் 7.18 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அம்மா உணவங்களில் உணவு இலவசமாக வழங்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, சென்னையில் 300 நிவாரண முகாம்கள், தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள், மழை பாதிப்பு தகவலை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அமைத்தது.

தமிழ்நாடு டி.என்.அலர்ட் செயலி மூலம் பாதிப்பு தொடர்பான தகவல் அறிந்து உடனடி நடவடிக்கை, அமைச்சர்கள், நகராட்சித் துறை, ஊராட்சித் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட மழை வெள்ள தடுப்பு செயல்பாடுகள் நல்ல பலனை தந்துள்ளன. தேங்கிய மழை நீர் 95 சதவீதத்திற்கும் மேல் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்திய மழை நீர் வடிகால் திட்டம் மிக முக்கிய காரணம். கிட்டத்தட்ட சென்னை இயல்பு நிலைக்கு வெகு விரைவாக வந்துள்ளது.

இதற்கு தமிழக அரசின் புயல்வேக செயல்பாடுகளே முக்கிய காரணம். தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாராட்டியுள்ளார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது. இதன்காரணமாக தமிழகத்தில் சுமார் 800 நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேட்டூர், வைகை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆறுகள், கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. ஒரு சில இடங்களில் பயிர்கள் சேதமடைந்தாலும், நீர்நிலைகள் நிரம்பி வருவதன் மூலம், அடுத்தடுத்த மாதங்களில் குடிநீர் மற்றும் பாசனத் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை விதையையும் மழை நம் மனதில் விதைத்துள்ளது.

The post அரசின் புயல் வேகம் appeared first on Dinakaran.

Read Entire Article