அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

2 hours ago 2

விருதுநகர்: அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு திவாலாகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் நிதி மேலாண்மையிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழ்நாடு அரசின் கடன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு மக்களிடையே தவறான தகவலை பழனிசாமி பரப்புகிறார். உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தே கடன் வாங்கும் அளவு, திருப்பிச் செலுத்தும் திறன் முடிவு செய்யப்படுகிறது. நிதிக்குழு பரிந்துரைத்த அளவைவிட குறைவாகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் நிதி நிலை என்பது கட்டுக்குள்தான் உள்ளது. நிதி மேலாண்மையிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு 28.7 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம் என்று நிதிக்குழு பரிந்துரைத்திருந்தது. 2021-22-ல் தமிழ்நாடு அரசு 2.71 சதவீதம் அளவுக்கே கடன் வாங்கியது. 2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.3 சதவீதம் கடன் வாங்க பரிந்துரைத்த நிலையில் 26.87% கடன் மட்டுமே வாங்கப்பட்டது. பல திட்டங்களை மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்தே செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வை தருவதே கிடையாது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதிப்பகிர்வை அளித்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதிப்பகிர்வாக வெறும் ரூ.7057 கோடி மட்டுமே அளித்துள்ளது. உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு 40% அளவுக்கு ஒன்றிய அரசு வரிப் பகிர்வு அளித்துள்ளது. தென் மாநிலங்களுக்கு வெறும் ரூ.27,000 கோடி வழங்கிய ஒன்றிய அரசு உ.பி. மாநிலத்துக்கு மட்டும் ரூ.31,000 கோடி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,000 கோடி வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,000 கோடி நிலுவை வைத்துள்ளது. தென் மாநிலங்களுக்கு 15% வரிப் பகிர்வை மட்டுமே ஒன்றிய அரசு அளித்துள்ளது. 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தனது பங்களிப்பை உயர்த்தவில்லை. மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்று.

மற்ற மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை விட சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. போராடுபவர்களை எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்திக்கலாம். தமிழ்நாடு அரசு திவாலாகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Read Entire Article