அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

3 hours ago 2

கரூர்: அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்; முதலமைச்சர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து 100 சதவீத வெற்றியை கொடுத்தது இந்த கரூர் மாவட்டம். நம்முடைய அரசுக்கும் கரூருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களில் 157 ஊராட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்த்துவிட்டோம் என நீங்கள் தெரிவித்தீர்கள். மகிழ்ச்சி. அப்படி வழங்கப்பட்ட இந்த விளையாட்டு உபகரணங்கள் முறையாக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறதா? அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதற்கென்று ஒரு APP ஐயும் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். ஆடுகளம் என்ற APP. அந்த செயலியை மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அனைவரும் பார்த்து விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகளை அறிந்து, அந்த Sports Kidsஐ பயன்படுத்தி, அது அவர்களுக்கு உபயோகமாக இருக்க அந்த ஆடுகளம் செயலியையும் பிரபலப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். மகளிர் சுய உதவி குழுக்களில், செயல்படாத பழைய குழுக்களை மீண்டும் செயல்பட வைக்கவும், புதிய குழுக்களை உருவாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்ற மனுக்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பதில் அளித்தாலே, முதல்வருடைய தனிப்பிரிவிற்கு வருகின்ற மனுக்களுடைய எண்ணிக்கை குறையும் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்கள். அதை மனதில் வைத்து அரசு அலுவலர்கள் மக்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரவேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு கனவாக இருக்கக்கூடிய கான்கிரீட் வீட்டை உறுதிபடுத்துகின்ற வகையில் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் வீடு வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

சாலை பராமரிப்பு என்பது தொடர்ந்து செய்ய வேண்டிய பணி என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். மக்களுடன் முதலமைச்சர் முகாம்களை வருகின்ற 15ம் தேதி நம்முடைய முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்த முகாம்களில் பெறப்படுகின்ற மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு மக்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கின்றார்கள். தீர்வுகாண முடியாத கோரிக்கை மனுக்களை தள்ளுபடி செய்ய நேர்ந்தால், என்ன காரணத்திற்காக, அதை செய்யமுடியவில்லை என்பதை மக்களுக்கு, அவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக விளக்கி கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கடந்த முறை மனு செய்த 1 கோடியே 60 லட்சம் பேரில், 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகின்றோம். மற்றவர்களுக்கு இந்த முகாம்களில் மனுக்களை வழங்குவார்கள். அதனால் அம்மனுக்களை முறையாக பரிசீலித்து தகுதியுள்ள ஒருவர் கூட விடுபடாத வகையில் செயல்படுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இன்னும் 8 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, அரசு அலுவலர்களான நீங்கள் இந்த அரசுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல பாலமாக செயல்பட்டு, நம்முடைய திராவிட மாடல் அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் நற்பெயரை பெற்றுத் தருமாறு உங்களையெல்லாம் மீண்டும் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன். என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. மாணிக்கம், ஆர். இளங்கோ, க. சிவகாமசுந்தரி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளர் ச.உமா, மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் மேயர் க. கவிதா, துணை மேயர் ப. சரவணன், காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஶ்ரீ லேகா தமிழ்செல்வன், குளித்தலை சார் ஆட்சியர் தி. சுவாதி ஶ்ரீ கோட்டாட்சியர் மு. முகமது பைசல் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article