ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தரமற்ற கட்டுமானத்தால் திறப்பு விழாவிற்கு முன்பே ஆற்றுடன் சாலை ஒன்று அடித்து செல்லப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள பகுலி மற்றும் ஜஹாஜ் ஆகிய கிராமங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் நோக்கில், பா.ஜ அரசு சார்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சாலை, முறையான திறப்பு விழாவிற்காகக் காத்திருந்தது. இந்தச் சாலையானது, அப்பகுதியில் உள்ள கட்லி ஆற்றின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பெய்த 86 மி.மீ அளவிலான கனமழையால், கட்லி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரோட்டத்தின் வேகம் அதிகரித்து, ஆற்றின் கரையில் இருந்த புதிய சாலையின் பெரும் பகுதியை வெள்ளம் அரித்து, அடித்துச் சென்றது. திறப்பு விழாவுக்காகக் காத்திருந்த சாலையே ஆற்றுக்குள் கரைந்து செல்வதைக் கண்ட அக்கம் பக்கத்து கிராம மக்கள், அதனை ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
The post ராஜஸ்தானில் பரபரப்பு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை: பாஜ அரசு மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.