அரசாங்கங்கள் வரும்,போகும், நட்புகள் தொடரும்...கெஜ்ரிவாலை சந்தித்த பின் ஆதித்ய தாக்ரே கருத்து

1 week ago 3

புதுடெல்லி,

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் பிப்.8-ம் தேதி வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.

இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது. அதேவேளையில் மராட்டிய மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டு பேசிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே இன்று புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

அரசாங்கங்கள் வரும், போகும், ஆனால் உறவுகள் தொடரும், நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம், சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இல்லை, அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இல்லை.மராட்டியம், அரியானா, ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது. மக்களின் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது. இந்த பிரச்சினையை பற்றி விவாதிக்கக்கூட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் முறையாக எழுப்பப்படும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நாட்டிற்கும் அவசியம் என்றார்.

ஆதித்யா தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ராகுல்காந்தியையும் ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது டெல்லி தேர்தல் மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Read Entire Article