திருச்சி: அரசமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் பாஜ அரசு செயல்பட்டு வருகிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் மே 31ம் தேதி மதச்சார்பின்மையை காப்போம் என்கிற மையக்கருத்தில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி குறித்தான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அரசமைப்புக்கு எதிரான தாக்குதலை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அரசமைப்பின் உயிர் மூச்சான கோட்பாடு மதச்சார்பின்மையாகும். அரசமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் பாஜ செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களை தான் பாஜ கூறி வருகிறது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் நயினார் நாகேந்திரன் பேச கூடாது. வடகாட்டு பிரச்னை தொடர்பாக பாஜ எந்த கருத்தையும் கூறவில்லை. போராட்டமும் நடத்தவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசும் அவர்கள் ஜாதிய பிரச்னைகள் குறித்தும் பேச வேண்டும். பாமக மாநாட்டில் கருத்தியல் ரீதியாக யாரும் பேசவில்லை. உணர்ச்சியை தூண்டும் வகையில் தான் பேசியுள்ளார்கள். சமூக நீதி குறித்தோ, மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்கள் குறித்தோ பேசாமல் விசிகவை சீண்டும் வகையில் மாநாட்டில் பேசி உள்ளது ஏமாற்றத்தை தான், அந்த கட்சியில் தொண்டர்களுக்கு தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அரசமைப்புக்கு எதிரான தாக்குதலை ஒன்றிய அரசு தொடர்ந்து நடத்துகிறது: திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.