அரக்கோணம் நகராட்சியில் வரி வசூலித்த ஊழியர்களுக்கு கொலைமிரட்டல் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

12 hours ago 1

அரக்கோணம், மார்ச் 12: அரக்கோணம் நகராட்சி சார்பில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், வீட்டு வரி, கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு வரி வசூல் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் பில் கலெக்டர்கள் 4பேர் உள்பட ஊழியர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். மார்ச் மாதம் இறுதிக்குள் வரி வசூலை முடிக்க வேண்டும் என்பதால் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி பில் கலெக்டர் ஆதாம் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை அரக்கோணம் நேருஜி நகரில் வரி வசூலித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த நபர், ‘தொடர்ந்து வரி கேட்டு தொந்தரவு செய்வீர்களா’ எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அதற்கு ஊழியர்கள், ‘வரி பாக்கி அதிகமாக உள்ளது.

அவற்றை உடனடியாக கட்டுங்கள்‘ என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பில் கலெக்டர் மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையறிந்த நகராட்சி ஊழியர்கள், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி பணியை புறக்கணித்து வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பில் கலெக்டரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர். இச்சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அரக்கோணம் நகராட்சியில் வரி வசூலித்த ஊழியர்களுக்கு கொலைமிரட்டல் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article