
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில், வாரணாசியில் இருந்து அயோத்திக்கு வந்த பெண் பக்தர் ஒருவர், ராமர் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.
விடுதியில் உள்ள குளியலறையில் அந்த பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, மேற்கூரையில் இருந்த இடைவெளி வழியாக யாரோ ஒரு நபர் மொபைல் போனை வைத்து படம்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்ட சத்தத்தைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து குற்றவாளியை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரின் பெயர் சவுரப் திவாரி என்பதும், அவர் அதே விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
அவரது மொபைல் போனை போலீசார் சோதனை செய்தபோது, அதில் இதே போல் பல பெண்கள் குளிப்பதை அவர் வீடியோ எடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.