அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலின் முதலாம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இவ்விழாவுக்கு 110 விஐபிக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்நிலையில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது.
3 நாட்கள் நடக்கும் இவ்விழாவுக்காக ராமர் கோயில் மலர்களால் பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பல்வேறு மத, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணிக்கு யஜூர்வேத பாராயணத்துடன் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் குழந்தை ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்தார். பிற்பகல் 12.20 மணிக்கு சிறப்பு ஆரத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குழந்தை ராமருக்கு 56 விதமான உணவுகள் படைக்கப்பட்டன.
ஏராளமான பக்தர்கள் திரளமாக கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தை ராமரை தரிசித்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க முடியாத 110 விஐபிக்களுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறி உள்ளார். 3 நாட்களுக்கு யாகங்கள் உள்பட சிறப்பு வழிபாடுகள் மற்றும் ராம கதை சொற்பொழிவுகள் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு விழாவுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பல நூற்றாண்டுகளின் தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோயில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியம். இந்த தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோயில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய சிறந்த உத்வேகமாக மாறும் என்று நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.
The post அயோத்தியில் கோலாகலம் ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா துவங்கியது: 110 விஐபிக்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.