அயர்லாந்து மகளிருடன் 2ம் ஓடிஐ வாகை சூடிய இந்தியா: சதமடித்த ஜெமிமா ஆட்ட நாயகி

4 hours ago 3

ராஜ்கோட்: அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி, 116 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 54 பந்தில் 73, பிரதிகா ராவல் 61 பந்தில் 67 ரன் குவித்தனர். அணியின் ஸ்கோர் 156 ஆக இருந்தபோது இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிகஸ் அயர்லாந்து வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையில் ஈடுபட்டனர். 3வது விக்கெட்டுக்கு இவர்கள் 186 ரன் குவித்தனர். ஜெமிமா 102 ரன், ஹர்லீன் 89 ரன் குவித்து அவுட்டாகினர். 50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 370 ரன் குவித்தது. அயர்லாந்தின் ஒர்லா பிரெண்டர்காஸ்ட், அர்லீன் கெல்லி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 371 ரன் இலக்குடன் அயர்லாந்து வீராங்கனைகள் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் சாரா போர்ப்ஸ் 38, கேப்டன் கேபி லுாயிஸ் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கிறிஸ்டினா கோல்டர் ரெய்லி சிறப்பாக ஆடி 80 ரன் சேர்த்தார். ஒர்லா பிரெண்டர்காஸ்ட் 3, லாரா டெலானி 37, அர்லீன் கெல்லி 19, அவா கேனிங் 11 எடுத்து அவுட்டாகினர். 50 ஓவர் முடிவில் அயர்லாந்து 254 ரன் மட்டுமே எடுத்து 116 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சதம் விளாசிய ஜெமிமா ஆட்ட நாயகி. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

 

The post அயர்லாந்து மகளிருடன் 2ம் ஓடிஐ வாகை சூடிய இந்தியா: சதமடித்த ஜெமிமா ஆட்ட நாயகி appeared first on Dinakaran.

Read Entire Article