சென்னை: அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்.14-ம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை காலை 7.30 மணிக்கே திறக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டக் கல்லூரி மாணவி அன்பரசி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், “சட்டமேதை அம்பேத்கரின் 135-வது பிறந்த தினம் வரும் ஏப்.14 அன்று விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்துக்கு ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வருகை தந்து அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதால் அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரி வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.