
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவை சேர்ந்தவர் கிரண் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர்கள் 2 பேரும் பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதாவது 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் 2 பேரும் தங்கள் காதலை கைவிடவில்லை. பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி ஆனேக்கல் தாசில்தார் ஸ்ரீதர் முன்னிலையில் 2 பேரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அம்பேத்கர் ஜெயந்தி விழா நடந்த பொது மேடையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் தலித் அமைப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அம்பேத்கர் ஜெயந்தியன்று காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.