பெரும்புதூர், அக்.9: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த, தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்க, 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த, சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் சிஐடியு சங்கம் தொடங்கி, அதற்கான அறிமுக கடிதத்தை நிர்வாகத்திற்கு அனுப்பினர். இதனை, நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து, கடந்த மாதம் 9ம்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கடிதம் மூலம் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். அந்த வகையில், கடந்த 9ம்தேதி முதல் மறியல் போராட்டம், உண்ணாவிரத போராட்டம், குடும்பத்துடன் போராட்டம் என நேற்று வரை 25வது நாளாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே 5வது முறையாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மீண்டும் இருங்காடுகோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் சண்முகம், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த, பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில், அக்டோபர் மாதம் முதல் மார்ச் 2025ம் ஆண்டு வரை ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பணியின்போது உயிரிழந்த தொழிலாளார் குடும்பத்திற்கு நிர்வாகம் சார்பில் ₹1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று நிர்வாகம் அறித்தது. ஆனாலும், சிஐடியு சங்கத்தை அனுமதிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் 26வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் குவிப்பு
சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறும் திடல் அருகே பெரும்புதூர் ஏஎஸ்பி உதயகுமாரின் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
10 பேர் காயம்
தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் வரும் பேருந்துகளில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, தொழிலாளர்கள் வந்த வாகனம் விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட தொழிலாளர் காயமடைந்தனர். இதனால், காவல் துறைக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
The post அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு: மறுப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டம் appeared first on Dinakaran.