சிம்லா: மக்களவை தேர்தல் தோல்வியை அமைச்சர் விக்ரமாதித்ய சிங்கால் ஜீரணிக்க முடியவில்லை என்று மண்டி ெதாகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்தார். பாலிவுட் நடிகையும், இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி எம்.பி.யுமான கங்கனா ரனாவத், மண்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ‘அரசியலில் போட்டி இருக்கலாம்; ஆனால் அதுவே எல்லை மீறி இருக்கக் கூடாது. மற்றவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதோ, அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ கூடாது. இமாச்சல பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். ஆறு முறை முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வீரபத்ர சிங்கின் மகனான விக்ரமாதித்ய சிங், மக்களவைத் தேர்தலில் என்னிடம் தோற்றார்.
அந்த தோல்வியை இன்னும் அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. மேலும் மண்டி தொகுதியின் முன்னாள் எம்பியான பிரதீபா சிங் (விக்ரமாதித்ய சிங் தாயார்) மற்றும் அவரது குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக இப்பகுதியை ஆண்டபோதிலும், எம்பி தொகுதி நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை. இப்பகுதி மக்களுக்காக அவர் ஒருபோதும் மக்களவையில் பேசியதில்லை. பன்முகத்தன்மை கொண்ட மண்டி தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். அதே நேரத்தில் இயற்கை சீற்றங்கள் போன்ற சவால்களையும் இப்பகுதி மக்கள் எதிர்கொள்கின்றனர். பர்மவுர், பாங்கி போன்ற தொலைதூரப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போதுமானதாக இல்லை. ரயில்வே, மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற அடிப்படைப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்’ என்று கூறினார்.
The post அமைச்சர் விக்ரமாதித்ய சிங்கால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை: பாஜக எம்பி கங்கனா விமர்சனம் appeared first on Dinakaran.