சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி (திமுக) பேசுகையில், பாலவிடுதி துணை சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரமுயர்த்தி, விஷக்கடி மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘கடவூர் ஒன்றியத்தை பொறுத்தவரை மைலம்பட்டியில் இருக்கிற கடவூர் தாலுகா மருத்துவமனை தற்போது கூடுதலாக 9.75 கோடி ரூபாயில் புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, எதிர்காலத்தில் விஷ முறிவு சிகிச்சை பிரிவு ஒன்று அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாம்பு கடிக்கு அந்தந்த துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த காரணத்தினால், 34,859 பேர் பாம்பு கடிக்கு தடுப்பூசியின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 32,610 பேருக்கு நாய்க்கடி தடுப்பூசியும், 1,193 பேருக்கு பாம்பு கடி தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது’’என்றார்.
The post அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்; அனைத்து மருத்துவமனைகளிலும் நாய்க்கடி மருந்து இருப்பு வைப்பு appeared first on Dinakaran.