
விழுப்புரம்,
கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி பெஞ்சல் புயல் கரையை கடந்த போது வரலாறு காணாத மழை பெய்ததில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராம மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றனர். அப்போது சிலர், வனத்துறை அமைச்சர் பொன்முடி, அப்போதைய கலெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் எம்.பி.பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் மீது சேற்றை வாரி வீசி, திட்டியதுடன், அவர்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் இருவேல்பட்டு கிராமத்தை சோ்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் தேடி வந்தார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் (வயது 26) என்பவரை போலீசார், சுமார் 80 நாட்களுக்கு பிறகு நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை போலீசார் தேடி வருகின்றனர்.