விழுப்புரம்: நீதி கேட்டு போராடிய பெண்களை காவலர்கள் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.