சென்னை / திருச்சி / கோவை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன், சகோதரர்களின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்கள் என சென்னை, திருச்சி, கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் நேருவின் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.