புதுடெல்லி,
தமிழக மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதாவது, கடந்த 2011-15ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், ஜாமீனில் வெளி வந்த பிறகு மீண்டும் மின் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும், இதனால், ஜாமீன் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி பாலாஜி சீனிவாசன் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதிகள் அறையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் , "செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி கூறிய தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை என்பதால் மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை" என்று தெரிவித்து மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.