அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் விதிமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 1

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தபோது சட்ட விதிமீறல் நடந்துள்ளதாககோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை. எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதனடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறினார்.

இதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் கூறியதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* தடயவியல் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் ஆஜரானார்.

அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சி.ஆர். மலர்வண்ணன் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை நிறைவடையாததை அடுத்து விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் விதிமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article