அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம்

1 day ago 4

சென்னை: 13.05.2025 அன்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆணையர் த.ஆபிரகாம் வேளாண்மை துறை இயக்குநர், பி.முருகேஷ் சர்க்கரை துறை இயக்குநர் தா.அன்பழகன் தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.பி.மஹாபாரதி மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாட்டின் உணவு பதப்படுத்தல் மற்றும் இந்திய அளவில் தமிழ்நாட்டின் வேளாண் ஏற்றுமதி நிலை குறித்து விளக்கினார். வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக மாற்றிட புதிய திட்டங்களை வகுக்க அறிவுறுத்தினார். வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினார். மேலும் தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களான அரிசி, முருங்கை, மாம்பழம், பலாப்பழம் மற்றும் மிளகாய் போன்ற பொருட்களுக்கு மதிப்பு சங்கிலி உருவாக்குதல் குறித்தும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகளை மாவட்ட அளவில் சென்று விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களை நேரில் சந்தித்து ஏற்றுமதியில் உள்ள சவால்களைக் கண்டறிந்து வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகளை மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் ஏற்றுமதி மற்றும் உணவு பதப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு ஏற்ப சந்தைத் தேவைகளை கண்டறிந்து ஏற்றுமதிக்கு ஏற்ற பயிர்கள் சாகுபடி குறித்தும் மற்றும் விளைபொருட்களை மதிப்புகூட்டுதல் மற்றும் ஏற்றுமதி செய்ய விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார். மாவட்டம்தோறும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நிறுவப்பட்டுள்ள உளர்களங்கள், சேமிப்புகூடங்கள் மற்றும் அதைச்சார்ந்த கட்டமைப்புகளை விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றிடவும், தமிழ்நாட்டில் புதிய ஏற்றுமதியாளர்கள் உருவாக்குதல் மற்றும் அதிக அளவில் வேளாண்விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

The post அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article