அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி - மனோ தங்கராஜ்

19 hours ago 3

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதங்கள் அடிப்படையில் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரி மூலம் கவர்னர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்றுக்கொண்டு செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த அமைச்சரவை மாற்றத்துக்கான ஒப்புதலையும் வழங்கினார்.

அந்த வகையில் ராஜினாமா செய்த பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் வசம் இருந்த இலாகாக்கள் 3 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்து அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த பால்வளத்துறை எடுக்கப்பட்டு, அவருக்கு வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பால்வளத்துறை மனோ தங்கராஜ் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனோ தங்கராஜ் வாழ்த்து பெற்றார். மேலும் அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மக்கள் சேவையாற்ற தமிழக அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். இதற்கு உறுதுணையாக இருந்த கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், எனது மனப்பூர்வமான நன்றிகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article