அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்த வேண்டும்: சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு யோசனை

2 days ago 2

புதுடெல்லி:

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். 'ரெசிப்ரோகல்' என்று அழைக்கப்படும் பதிலுக்குப் பதில் என்ற வரி விதிப்பை கையில் எடுத்துள்ளார். அதாவது, ஒரு நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதிலுக்கு வரி விதிக்கும் என கூறியிருக்கிறார் டிரம்ப். வரியே விதிக்காத நாட்டுக்கு அமெரிக்காவும் வரி விதிக்காது என்பதையும் அவர் கூறியுள்ளார்.

பல நாடுகள் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. சீனா, கனடா ஆகிய நாடுகள் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவின் இறக்குமதிக்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. குறிப்பாக, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

ஆனால், தொடர்ந்து இந்தியாவை அவமானப்படுத்தும் டிரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும், பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் வரிகளை அறிவிக்க வேண்டும் எனவும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆர்ஐ) தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "தவறான தரவுகளை பயன்படுத்தி இந்தியாவை பகிரங்கமாக அவமானப்படுத்துகிறார் டிரம்ப். இதுபோன்ற சூழ்நிலை இருந்தால் இரு தரப்பிற்கும் வெற்றியைத் தரும் சமநிலையான முடிவு ஏற்பட சாத்தியம் இல்லை. எனவே, இந்தியா அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இருந்தும் விலக வேண்டும். மற்ற நாடுகளைப் போல அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தான் சுட்டிக்காட்டிய பிறகு, அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் சமீபத்தில் பேசியிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீவஸ்தவா, "இது முற்றிலும் தவறானது. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் டிரம்ப் இவ்வாறு பேசி வருகிறார். இந்த விஷயத்தில் இந்தியாவின் மவுனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியா உண்மையான தரவுகளை கொண்டு எதிர்கொள்ள வேண்டும். டிரம்பும் அவரது அதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

இதேபோல் இந்தியாவில் விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் இதற்காக வேளாண் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கக்கூடாது என்றும், அவ்வாறு வேளாண் சந்தையை திறந்துவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா எச்சரித்துள்ளார்.

"இந்தியாவில் விவசாய துறையை நம்பி 70 கோடி மக்கள் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் 70 லட்சம் பேர் மட்டுமே விவசாய துறையில் உள்ளனர். ஒரு சில விவசாய பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தாலும்கூட அது ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் பிறகு அவர்கள் மேலும் மேலும் சலுகைகளை கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.

பல அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஏற்கனவே குறைவான வரிதான் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்க பாதாமிற்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. பிஸ்தாவுக்கு 10 சதவீத வரி இருக்கிறது. அதேசமயம், இந்தியா விவசாய பொருட்களை அமெரிக்காவுக்கு குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது. 5 பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாய பொருட்கள், பால் மற்றும் கடல்சார் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இப்போது அவர்களின் விவசாய பொருட்களுக்கு வரி விதித்தாலும் கூட அது இந்தியாவின் ஏற்றுமதியை பெரிய அளவில் பாதிக்காது.

அதேசமயம், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இன்று இந்தியா ஒப்புக்கொண்டால், எதிர்காலத்தில் அமெரிக்க பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டுவிடும்.

பல நாடுகள் டிரம்பின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் நேரத்தில், இந்தியாவும் அதையே செய்ய வேண்டும். குறுகிய கால தீர்வைவிட நீண்டகால பொருளாதார மீள்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்கா 'பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம்' என்ற வரிச்சலுகையை நிராகரித்து, பரஸ்பர வரிகளை விதிக்கும்பட்சத்தில் தேவைப்பட்டால் மட்டுமே இந்தியாவும் பதில் வரிகளை வேண்டும். ஏனெனில் பரஸ்பர வரிகள் பெரும்பாலான தொழில் துறைகளை பாதிக்காது என்று வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன" என ஸ்ரீவஸ்தவா கூறினார்.

Read Entire Article