அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய மாணவர்கள் கடத்தலில் கனடா கல்லூரிகளுக்கு தொடர்பு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை

3 weeks ago 5

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய மாணவர்களை கடத்துவதில் கனடாவில் உள்ள சில கல்லூரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் குடும்பத்தினர் கடும் பனியால் உறைந்து பலியான சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடந்தது. இவர்கள் குஜராத்தை சேர்ந்த டிங்குச்சா கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக பாவேஷ் அசோக்பாய் படேல் உள்ளிட்டோர் மீது அகமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய விரும்பும் நபர்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இதற்காக மாணவர் விசா மூலம் கனடாவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு செல்ல ஏற்பாடு செய்து தருகின்றனர்.

இதற்கு உதவ கனடாவிலும் பல கல்லூரிகள் இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10, 19ம் தேதிகளில் மும்பை, நாக்பூர், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 8 நகரங்களில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. இதில் 2 நிறுவனங்கள் சிக்கி உள்ளன. இவர்கள் அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க ரூ.55 முதல் ரூ.60 லட்சம் வரை பெறுகின்றனர். கனடாவை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவற்றில் கனடா எல்லை அருகே அமைந்துள்ள சில கல்லூரிகள் கமிஷன் பெற்றுக் கொண்டு, மாணவர் சேர்க்கை நடத்தி உள்ளனர். அக்கல்லூரிகள் பெறும் கல்விக் கட்டணத்தை தனிநபர்களின் கணக்குகளில் திருப்பி அனுப்பி விடும். இத்தகைய கல்லூரிகள் குறித்தும், இந்திய நிறுவனங்களின் பங்கு குறித்தும் அமலாக்கத்துறை தற்போது தனது விசாரணையை தீவிரமாக்கி இருப்பதாக கூறி உள்ளது.

The post அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய மாணவர்கள் கடத்தலில் கனடா கல்லூரிகளுக்கு தொடர்பு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article