அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த 'டிக்டாக்'

4 hours ago 2

வாஷிங்டன்,

'டிக் டாக்' எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனையொட்டி நேற்று அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அதன் நிறுவனம் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தது. அதில் டிக்டாக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டிக்டாக் செயலியை வழக்கம்போல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிக் டாக் சேவைக்கு தடை விதித்து அமெரிக்கா கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப், டிக்டாக் செயலி தடைக்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக டிக்டாக் நிறுவனம் கூறுகையில், "டிக்டாக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்டு டிரம்புக்கு நன்றி. நீண்ட கால தீர்வுக்கு டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Read Entire Article